Saturday, February 9, 2013


















ரிஷிகளும், சித்தர்களும் நமக்களித்த பல அபூர்வமான விஷயங்கள் பலவற்றை நாம் இழந்துவிட்டோம். பல யுகங்களாக குரு சிஷபயர் பரம்பரையாகவும், மிக இரகசியமாகவும், பல கட்டுப்பாடுகளுடனும் பின்பற்றப் பட்டுவந்த அவைகளை கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளில் நாம் நிறையவே இழந்துவிட்டோம். அதற்கு பல காரணங்கள். கால மாற்றங்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், அரசியல் மாற்றங்கள், ஆட்சிமுறை மாற்றங்கள், அன்னியர்களின் படையெடுப்பு, நம்முடைய வாழ்க்கை முறை மாற்றங்கள், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட கலாசார வீழ்ச்சி என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தற்போது அவையெல்லாம் புத்துயிர் பெற்று வருவது போலத் தோன்றினாலும் மரணமில்லா பெரு வாழ்வு என்கிற கலையை இழந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கு விஞ்ஞான வளர்ச்சி ஒரு காரணமாக இருந்தாலும், சரியான வழிகாட்டும் குருமார்கள் இல்லை என்பதுவும் தான். இப்படி ஒரு காலகட்டம் வரும் என்று முன்பே சித்தர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் எங்கள் நூல்கள் கிடைக்கப் பெறுபவர்கள் புரியவில்லையே என்று கலங்க வேண்டாம். அதிலுள்ள வரிகளை மீண்டும் மீண்டும் படித்தால் பொருள் தன்னால் உங்களுக்கு விளங்க வரும் என்று சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இடையிடையே உள்ள பாடல்களைப் படித்தால் எதுவும் விளங்காது. தவறாகப் பொருள் கொண்டு எதையாவதுச் செய்து பார்த்தால் அது சித்தியாகாது. அதன் பிறகு எங்கள் நூல்களை குறை கூறுவதால் எந்தப் பயனுமில்லை என்கிறார்கள். இதற்கு ஆதாரமாக ஒரு பாடலை மட்டும் சொல்கிறேன் படியுங்கள்.
நல்லாக சாஸ்திரங்க ளெல்லாந் தன்னை
நாடியே யுழைத்துநீ நாடிப் பார்த்து
கல்லாக மனதுதனி லெண்ணி நீயும்
கருத்துறவே யூணிப்பார் கடினமில்லை. பாடல் 144
யாக்கோபு சுண்ணம் 300ல் உள்ள ஒரு பாடல் இது.
இப்படி ஆண்டுகள் பல வனங்களில் திரிந்து, அன்ன ஆகாரமின்றித் தவமிருந்து அந்தத் தவ வலிமையால் தங்கள் உடல்கூறுகளைத் துல்லியமாக உணர்ந்து விஞ்ஞானத்துக்கும் எட்டாத பல அபூர்வ விஷயங்களை நமக்கு சுயநலமின்றி தந்தருளியுள்ள இவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள, அதை முழுவதுமாக உணர நாம் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ ? தெரியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக கலியுகத்தில் என்ன நடக்கும் என்று தற்போது நடக்கும் விஷயங்களை முன்னரே எவ்வளவுத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து வியந்து போனேன். போகர் 7000 மூன்றாம் காண்டத்தில் உள்ள பாடல் இது.(பாடல் -2019, 2020)
''காணவே சொல்லறிய உலக ஆசான்
கருதியவன் பணம்பறிக்க எத்துப் பண்ணி
நீணவே நெடிதாகச் சிவம் உண்டு பண்ணி
நிலையாமல் சீடனுக்கு பிறப்பு உண்டாக்கி
ஊணவே உலகமெல்லாம் இப்படியே போச்சு
உக்கி அந்த மாயத்தே உழன்று போனார்
தாணவேதான் தாள்திறந்தால் அவனே ஆசான்
சமர்த்தான குரு தேடி சார்பு கொள்ளே
சார்புறல்தான் சொல்லறியான் உலக ஆசான்
சமரசமாய்ப் பணம்பறிக்க சாங்கம் சொல்வான்
நாவுறவே நாள்போக்கிச் செபத்தைப் பண்ணி
ஞானியென்று பெயரிட்டுக் கொண்டு தானும்
பாரிலேதான் சஞ்சரிப்பார் சையோகிப்பார்
பரிந்தகுடி கெடுப்பார்கள் பொய்யும் சொல்வார்
ஓர்வுறவே வேடங்கள் அதிகம் பூண்பார்
உருட்டுவார் உலகத்து ஞானிதானே.''
தன்னைப் பெரிய குருநாதன் என்று சொல்லிக் கொண்டு, பெரிய சிவலிங்கங்களை உண்டு பண்ணி, பொய்களைக் கூறி உன்னிடமுள்ள பணத்தை யெல்லாம் பறிப்பார்கள். நிலையான யோகம் ஏதும் அறியாமல், இவர்களை நம்பி வந்த சீடர்களையும் பிறவிச்சுழலில் சிக்க வைப்பார்கள். இப்படிப்பட்டவர்களின் பொய்யான மாயப் பேச்சில் இந்த உலகில் உள்ள நிறைய பேர் மயங்கிப் போனார்கள். முறையான வாசியோகத்தைக் கற்றுக் கொடுத்து, ஞான வழியை யார் காட்டுகிறாரோ அவரே உண்மையான குருவாவார். அவரை நீ தேடிக் கொள். அதைவிட்டுவிட்டு பலவிதமானப் பொய்களைக் கூறி பணம் பறிப்பவர்களையும், நாட்கணக்கில் ஜெபம் செய்தால் போதும் என்று சொல்லிக் கொண்டும், பெண்போகம் செய்து கொண்டும், தான் ஒரு ஞானி என்று சொல்லிக் கொண்டும், உருட்டு, புரட்டாகப் பேசி குடிகெடுக்கும் சண்டாளர்களை இனம் கண்டு கொண்டு அவர்களை நெருங்கிவிடாமல் கவனமாக இரு என்று எவ்வளவு தெளிவாக்க் கூறி இருக்கிறார் பாருங்கள். அடுத்து இந்தப் பாடலைப் பாருங்கள்.
''மலைமலை யாய்ச் சுற்றிச் சுற்றி மாண்டவர் கோடி
மறை நூல்கள் கற்றறிந்து மாண்டவர் கோடி
கலை பலவும் கற்றறிந்து மாண்டவர் கோடி
கரை சேர வழிதேடி மாண்டவர் கோடி
சிலைகளெ ல்லாம் சுற்றி வந்து மாண்டவர் கோடி
சிறையைப் போல் குகையிருந்து மாண்டவர் கோடி
அலைபோல மனமாயை தன்னினாலே
அலைந்த லைந்து மாண்டவர்கள் கோடி கோடி
நிலைபெறாத யோகத்தில் மாண்டவர் கோடி
நின்று கொண்டே தவமிருந்து மாண்டவர் கோடி
உலையா சந்யாசத்தில் மாண்டவர் கோடி
ஒன்றி நின்ற சம்சாரத்தில் மாண்டவர் கோடி
மன்றாடி பூசை செய்தும் மாண்டவர் கோடி
வலை போல பின்னி நிற்கும் வாசியைத் தானே
வழி நடத்த அறியாமல் மாண்டவர்கள் கோடானு கோடி.''
பொருள் வெட்ட வெளிச்சமாகப் புரிகிறது பாருங்கள். இவ்வளவு தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகும், மனதில் சந்தேகம் கொண்டு பொன்னான வாழ்வை வீணாக்கலாமா ?

Courtesy: Facebook

No comments:

Post a Comment