சிவவாக்கிய சித்தர்
சித்தர்கள் ஞான நிலை எய்தும்போது இந்த பிரபஞ்ச இரகசியம் அனைத்தும் திரை அகன்று விடுகிறது.அகக்கண் விழிக்கும்போது புறக்கண்ணுக்குப் புலனாகதது எல்லாம் புலப்படுகிறது. பொய்யான ஆச்சாரங்களையும்,போலியான அனுஷ்டங்களை சிவ வாக்கியர் வெறுத்தார். முற்றிலும் ஆசை அறுத்த ஞானியாக சிவ வாக்கியர் இருந்தார். கடவுள் உன்னுள் இருக்கிறார் வெளியில் தேடி திரியாதே என்று பாடியுள்ளார்.
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
சிவவாக்கியர் ஒருநாள் கீரையைப் பிடுங்கும் போது ஆகாய வீதிவழியே கொங்கணவச் சித்தர் ககன மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தார். சிவ வாக்கியரின் தவ ஒளியால் கவரப்பட்ட கொங்கணவ சித்தர் அந்தக்காட்டில் கீழே இறங்க இருவரும் மகிழ்ந்து உரையாடினார். சிவ வாக்கியரின் மகா சித்துக்களை நன்கறிந்த கொங்கணவச் சித்தர்.அதன்பின் அங்கே இறங்கி சிவ வாக்கியரிடம் உரையாடிச் செல்வார். சிவ வாக்கியர் தினம் மூங்கில் பிளப்பதும், முறம், கூடைகள் செய்வதும் பார்த்து ஆச்சரிப்பட்டார் கொங்கண சித்தர்.அவருக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினார். ஒருநாள் சிவ வாக்கியர் குடிசையில் இல்லாத நேரத்தில் கொங்கணவ சித்தர் சென்றார். குடிசையில் சிவ வாக்கியர் மனைவி மட்டுமே இருந்தார்.
வீட்டில் ஏதாவது உபயோகமில்லா இரும்புத்துண்டு இருந்தால் கொண்டு வா அம்மா’’ என்று கேட்டதும் சிவ வாக்கியாரின் மனைவி வீட்டில் கிடந்த சில இரும்புத் துண்டுகளைக் கொண்டுவந்து கொடுத்தார். கொங்கணவர் அந்த இரும்புத்துண்டுகளை எல்லாம் தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து மறைந்தார்.சிவ வாக்கியர் வீடு திரும்பி வந்தபோது அவரது மனைவி கொங்கணவர் வந்து போனதை கூறியபடிதங்கக் கட்டிகளைக் கொண்டு வந்து முன்னால் கொட்டினாள். சிவ வாக்கியர் அதனைக் கண்டு திடுக்கிட்டு,கொங்கணவச் சித்தர் தன்னை சோதிக்கிறாரா அல்லது அன்பின் மேலீட்டால் இப்படி செய்தாரா என்று திகைத்தார். இந்த ஆட்கொல்லியை ஒரு நிமிடம் கூட இந்த குடிசைக்குள் வைத்திருக்காதே, ஏதாவது பாழும் கிணற்றில் போட்டுவிடு. ஆட்கொல்லி…, ஆட்கொல்லி”” என்றார் சிவ வாக்கியர்.அதைக் கேட்ட அவருடைய மனைவி மறுபேச்சு எதுவும் பேசாது தங்கத்தைக் கொண்டு போய் கிணற்றில் போட்டாள்.
பின்னொரு நாளில் நடுப்பகலில் சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு பாறையின் மீது சிறுநீர் கழித்து விட்டு தன்னுடைய மனைவி அழைத்து, ‘’இந்த பாறையின் மீது தண்ணீரைக் கொட்டு” என்றார். அவளும் தண்ணீரை அந்த பாறையின் மீது ஊற்றிய போது குப்பென்று புகை கிளம்பி மறைந்தது. அந்த பாறை தங்கமாக மாறியது. சிவ வாக்கியர் சித்தரின் சிறுநீர் இரசவாத தனமை பெற்றதால் அந்த மாயம் நிகழ்ந்தது. சிவ வாக்கியர் தன் மனைவியைப் பார்த்து ”கொங்கணவர் கொடுத்தது சிறிய தங்கத்துண்டு. இதோ வேண்டிய அளவு தங்கத்தை வெட்டி எடுத்துக்கொள் “ என்றார்.
“சுவாமி, உங்களுக்கு நான் மனைவியாகிய பின்பு தங்கம் எனக்கு எப்படி உயர்ந்த பொருளாகும்.என்னைப் பொருத்தமட்டில் இது ஆட்கொல்லிதான். எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.
ஞானமார்க்கத்தில் திகழ்ந்த சிவ வாக்கியரை சுற்றி புதிய சீடர்கள் நாளும் தேடி வந்த வண்ணமிருந்தனர்.தேடி வந்த சீடர்கள் எல்லாம ஞானம் பெறுவதை விட தங்கம் தேடியதே அதிகம். திரும்ப திரும்ப இரசவாத வித்தை அறியவே விரும்பினர். இதனால் அவர் மிகவும் மனம் வருந்தினார்.“உங்களுடைய ஆவல் எல்லாம் எனக்கு புரிகிறது. இரசவாத வேதியல் இரகசியங்களைப் பற்றிஅறியவே விரும்புகிறீர்கள். கடும் தவத்தாலும் யோகத்தாலும்தான் இது சித்திக்கும்” என்றார்.”அப்படி என்றால் குருநாதரே! எங்களுக்கு அந்த இரசவாதம் கைக்கூடும் சாத்தியம் உண்டா?
“தங்கத்தின் மீது பற்றற்றவருக்கே தங்கத்தை உருவாக்கும் இரசவாதம் சித்தியாகும்.சித்தர்கள் பலருமே இரசவாத வித்தையில் தேர்ந்தவர்கள்தான். தாங்கள் அறிந்த அனுபவங்களை எல்லாம் இந்த பிரபஞ்சத்துக்குக் காணிக்கையாக அளித்துள்ளார்கள். யோக நெறியில் நின்று இரசவாதம் அறிந்தவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.தவவலிமையும், யோக நெறியும் உடைய சித்தர்களுக்குதான் இது சித்திக்கும்”.
”பற்றற்ற சித்தர்களுக்கு அந்த சித்தினால் என்ன பயன் சுவாமி” என்று மனம் நொந்த போன நிலையில்ஒரு சீடன் கேட்டான்.”தங்களது கடும் தவத்தாலும், யோகத்தினாலும் பெற்ற சித்திகள் அனைத்தும் பலவீன மாந்தருக்காகவே அர்ப்பணம் செய்துள்ளனர். சித்தரைப் போல மேன்மை நிலை அடைய நீ விரும்புகிறாயா? அல்லது பலவீனமான மாந்தர் நிலையே போதும் என்று கூறுகிறாயா?” “இரசவாதம் அறியும் சித்தர் போன்ற உயர்நிலை அடைவதற்கே தங்களிடம் சீடராக வந்துள்ளேன்” என்றான்.
“அப்படியா! நல்லது. ரஸம் என்பது சிவபெருமானின் விந்து. உன்னிடம் விந்து இருக்கும் போது சிவன் விந்துவை ஏன் தேடுகிறாய்? உனக்குள்ளே இருக்கும் விந்தை மணியாக்கிக் கொண்டால் அற்புதமான ஆற்றல்களைப் பெறலாம். யோக சாஸ்திரத்தின் இறுதி நிலை சாமதி. ஒருமுறை இந்த பிரம்மானந்தத்தைச்சுகித்து விட்டால் போதும். அவன் இந்தப் பிரம்மானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்தவனுக்கு லெளகீக சுகங்கள் துச்சமாகிவிடும். இந்தச் சாதகன் விரும்பும் போது அவனுக்கு முக்தி எனும் ஆன்ம விடுதலை கிடைக்கும். சரி இப்போது நீ எதனை விரும்புகிறாய்? என்று சிவ வாக்கியர் கேட்டபோது சீடனின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.
எனக்கு ரஸமும் வேண்டாம்; தங்கமும் வேண்டாம்,எனக்குச் சமாதி நிலை சித்திக்க அருள் புரியுங்கள்”
“ மூச்சைக் கட்ட முதலில் பழகு,“ நடு கால் நிறுத்து.“’’சகஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ்த் தாமரையில் மூச்சை நிறுத்தி “ அதுவே யோகம்’’, -என்று பயிலும் சாதனையினை சிவ வாக்கியரிடம் கற்றபோது சீடர்களுக்கு மனமொடுங்கியது.
“மனம் பழுத்தால் பிறவி தங்கம் –
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் –
தங்கத்தை எண்ணிப் பங்கம் போகாதே
தங்க இடம் பாரப்பா …..”
(நன்றி, உதவி நூற்குறிப்பு:- இறவா வரம் பெற்றவர்,-சித்தர் பூமி,- பதினெட்டு சித்தர்கள் பாடல்கள்)
/// கடவுள் உன்னுள் இருக்கிறார் வெளியில் தேடி திரியாதே ///
ReplyDeleteவிளக்கங்களுக்கு பாராட்டுக்கள்...
தொடர வாழ்த்துக்கள்...