சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி வர ஏறத்தாழ இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் "திதி' எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து 15 நாட்கள் சுக்லபட்சம் (வளர்பிறை), பவுர்ணமியிலிருந்து 15 நாட்கள் கிருஷ்ண பட்சம்( தேய்பிறை) எனப்படும். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பின்னால் செல்கிறது. 11வது நாளான ஏகாதசியன்று 132 டிகிரி பின்னால் இருக்கிறது. மேற்கூறிய நாளில் புவிஈர்ப்புசக்தி அதிகமாகிறது. இந்த சமயத்தில் எப்போதும் போல் உணவருந்தினால் சரியாக செரிக்காது. ஆகையால், இந்த நாளில் முன்னோர் விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.வைகுண்ட ஏகாதசியன்று, வழக்கமான 132 டிகிரியை விட, மேலும் 3 டிகிரி கூடுதலாக, சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் விரதம் இருக்கிறோம். ஏகாதசி விரதமிருந்தால், அதற்கு முன் பத்துநாட்கள் சாப்பிட்ட உணவிலுள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகிறது. வயிறு சுத்தமாகிறது. ஜீரணக்கருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதன் பின் நமக்கு வைட்டமின் "ஏ', "சி' தேவைப்படுகிறது. அதனால் தான் மறுநாள் துவாதசியன்று "ஏ' சத்து நிறைந்த அகத்திக்கீரை, "சி' சத்து நிறைந்த நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறோம். குற்றாலம் பராசக்தி கல்லூரி விஞ்ஞானபிரிவு மாணவிகளின் ஆய்வு இதை தெரிவிக்கிறது.
ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?
- ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.
- ஏகாதசி திதி முழுவதும் பட்டினி இருக்க வேண்டும்.ஆனால் உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, காய்கனிகள்,பழங்கள்,பால், தயிர் போன்றவற்றை பகவானுக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
- இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.
- ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர்.
- துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் ""கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
- துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர்கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
- உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
- வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
Courtesy: Facebook
No comments:
Post a Comment